அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்...காரணம் என்ன?
கீதா

மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்

டந்த ஆண்டு இந்திய மெடிக்கல் கவுன்சில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 24 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் புள்ளி விவரங்களைப் பார்த்தால், அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட இந்தியாவில் மார்பகப் புற்று நோயால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து உள்ளது" என்று கூறுகிறது. 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் எட்டில் ஒருவரும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 பேரில் ஒருவரும் மார்பகப் புற்றுநோயால் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. தில்லி, மும்பை, சென்னை, போபால், அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூரூ, போன்ற பெருநகரங்களில் 21.7 முதல் 28.7 சதவீதம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் புள்ளிவிவரம் வேறுபாடில்லாமல், மற்ற அனைத்து இந்திய நகரங்களுக்கும் பொருந்தும். இரு வாரங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடந்த புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அடையார் புற்றுநோய் மைய இயக்குனர் டாக்டர் சாந்தா, ‘அடுத்த 3 ஆண்டுகளில் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக உயரும்" என்று கூறினார்.

மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்று சென்னை பிரஸ்ட்  சென்டரின் இயக்குனர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணாவிடம் கேட்டபோது, ஒவ்வொரு ஆண்டும் மார்பகப் புற்று நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தாமதமான திருமணம், அதைத் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வதில் தாமதம், தாய்ப்பால் தராதது, குறிப்பிட்ட வயதிற்கு முன்பே பருவமடைவது, மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்பது தவிர, சுற்றுச்சூழல் மாசு, மரபியல் போன்ற பல காரணங்களில் எதுவாக வேண்டுமானாலும் இந்தப் பாதிப்பு அதிகமாவதற்கு காரணமாக இருக்கலாம்.

இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. மேற்கத்திய நாடுகளில் 50லிருந்து 60 வயதில்தான் பாதிப்பு இருக்கிறது என்றால் நம் நாட்டிலோ 40லிருந்து 50 வயதிற்குள் வந்துவிடுகிறது. ஆனாலும் இந்த எண்ணிக்கையை வைத்தெல்லாம் பீதியடைய அவசியமில்லை. Self hygiene எனப்படும் சுய சுகாதாரம், எப்படி ஒரு பழக்கமாக இருக்க வேண்டியது முக்கியமோ, அதேபோல breast self examination ( மார்பக சுய பரிசோதனை) அவசியம். மாதம் ஒரு முறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வழக்கத்திற்கு மாறாக ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால் டாக்டரின் ஆலோசனை பெறலாம். இதில் கவனிக்க வேண்டியது, இதுபோன்ற சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்களை ஆலோசிப்பதே நல்லது" என்கிறார் டாக்டர் செல்வி.

30 வயதிற்குட்பட்ட இளம் பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் பற்றிய அச்சமும் அதைத் தொடர்ந்து மருத்துவ ஆலோசனை  பெறுவதும் அதிகரித்து இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. இது எந்த அளவு உண்மை? சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் உஷா துரைசாமி, ஊடகங்கள மூலமாக பெண்களுக்கு நிறைய தகவல்கள் தெரிகிறது. விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் லேசாக ஏதாவது வலி, பிரச்சினை என்றாலும் உடனடியாக டாக்டரிடம் வருபவர்கள் அதிகமாகி விட்டார்கள். ஹார்மோன் மாற்றத்தினால், மாதவிலக்கு வருவதற்கு சில நாட்கள் முன்பு உடலில் சில மாற்றங்கள்  வரலாம். மார்பகங்களில் வலி, கனமான உணர்வு  இருக்கலாம். வலியுடன் சிறு கட்டிகள்  தெரியலாம்.

இவையெல்லாம் மாதவிடாய் முடிந்து 5 நாட்களில் சரியாகிவிடும். பொதுவாக மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய் கட்டி வலி இல்லாமல் இருக்கும்.  குறிப்பிட்ட நாட்களுக்கு மேலேயும் தொடர்ந்து இந்த பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறலாம்" என்கிறார்.

ஐ.நா. இந்த ஆண்டை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு ஆண்டாக அறிவித்து உள்ளது. பெண்களை பாதிப்பதில் முதலிடத்தில் இருக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை 2வது இடத்திற்கு தள்ளிவிட்டு மார்பகப் புற்றுநோய் முதலிடத்திற்கு வந்துவிடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. காரணம் தெரிந்தால்தான் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். புள்ளி விவரங்களைவிட புற்று நோய்க்கான காரணம் குறித்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியதே தற்போது அவசியமான ஒன்று.
பயப்பட வேண்டாம்!

எல்லா மார்பகக் கட்டிகளும் புற்று நோய் கட்டிகள் அல்ல. வளர் இளம் பருவத்தில் 20 வயதின் ஆரம்பத்திலும் கட்டிகள் (lumps)  புடைப்புகள் (bumps) வரலாம். இது உடல் வளர்ச்சியை காட்டுகிறது.  சிறு கட்டிகள் மார்பகத்தில் வரக் காரணம் ஹார்மோன் மாற்றம். இது  மாதவிடாய் முடிந்தவுடன் தானே சரியாகிவிடும். இந்தப்  பருவத்தில் அழியும் தன்மையுள்ள வட்டமான (round rubbery type) கட்டிகள் வரலாம். இதற்கு Fibro adenomas என்று பெயர். இது கேன்சர் கட்டி அல்ல. சிதைந்த கொழுப்புத் திசுக்கள் சேர்ந்து கட்டிகள் வரலாம்.

0 comments: