எப்போது தீரும் இருட்டு?
"காற்றை வில்லாக வளைப்போம்; மணலைக் கயிறாகத் திரிப்போம்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மூன்றே மாதங்களில் மின் வெட்டை நீக்குவோம்' என்றெல்லாம், வாக்குறுதி அளித்து, அரியணையில் அமர்ந்தவர்களின் ஆட்சியில் தான், வரலாறு காணாத அளவுக்கு, 16 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது.இந்த வரலாறு காணாத மின் வெட்டுக்கு, இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் தான் காரணம் என்று, பழியை சுலபமாக அடுத்தவர்கள் மீது சுமத்தி, தப்பித்துக் கொள்ள பார்க்கின்றனர். பழியை முந்தைய ஆட்சியின் மீது போடுவதற்காகவா, மக்கள், ஆட்சிப் பொறுப்பை அளித்தனர்?சரி... மாநில அரசு தான் இப்படி எனில், மத்திய அரசு எப்படி?
"இன்னும் ஐந்து ஆண்டுகளில், நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும், மின்சார வசதி செய்து தரப்படும்' என்கிறார் பிரதமர்; கொஞ்சம் கூட வெட்கப்படாமல்...! 65 ஆண்டுகளில் செய்ய முடியாததை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் செய்து காட்டுவார்களாம்!"ஒரு விஷயத்தை ஆறப் போட வேண்டும் அல்லது மூடி மறைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் போடு' என, வேடிக்கையாகக் கூறுவதுண்டு. இப்போது நாட்டில் நிலவி வரும் மின் வெட்டு பிரச்னையைத் தீர்க்க, சமாளிக்க, அரசு ஒரு அற்புதமான உபாயத்தை, அரசு கையில் எடுத்திருக்கிறது.
சூரிய சக்தி மூலம், வீட்டுக்கு வீடு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தான் அது. சூரிய சக்தி மூலம், 3,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதோடு, அதற்காக, வீடுகளில் சூரியசக்தி அமைக்க, ஊக்கத் தொகையும் அளிக்கப் போகின்றனர்."ஜவகர்லால் சோலார் சிஸ்டம்' மூலம், மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு, ஒவ்வொரு யூனிட்டுக்கும், மத்திய அரசு பணம் வழங்கி வருகிறது.ஆக, வீட்டில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து, அவரவர் வீட்டுத் தேவைகளை எதிர்கொள்ள முயன்றால், மாநில அரசு ஊக்கத் தொகை அளிக்கும். உற்பத்தி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும், மத்திய அரசும், மானியத்தொகை வழங்கும்.
மேலோட்டமாக பார்த்தால், சூப்பர் திட்டமாகத் தான் தோன்றும். நெருங்கி வந்து, பார்த்தால் தான், இந்த சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் உள்ள கோளாறுகள் தென்படும்.சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய பயன்படும் உபகரணங்களைப் பொருத்த முதலில், "மொட்டை மாடி' வேண்டும். சொந்தமாக வீடின்றி, வாடகை வீட்டில் வசிப்பவர்களின் நிலைமை என்ன? நாட்டில் எத்தனை பேர்களுக்கு சொந்த வீடு உள்ளது?இப்போதெல்லாம், 30 - 40 மாடி என்று, "ப்ளாட்' கட்டப்படுகின்றன. மொத்தம், 10 ஆயிரம் சதுரடி நிலத்தில், ஒரு ப்ளாட்டுக்கு, 2,400 சதுரடி வீதம், ஒரு தளத்திற்கு, நான்கு ப்ளாட்டுகள் வீதம், 20 மாடியில், 80 ப்ளாட்கள் சர்வ சாதாரணமாக கட்டப்பட்டிருக்கும். அந்த, 2,400 சதுரடி ப்ளாட்டிற்கு, எத்தனை டியூப் லைட்கள், "ஏசி' மிஷின்கள், மின் விசிறிகள், எல்.சி.டி.,கள், வாட்டர் ஹீட்டர்கள், பிரிஜ் மற்றும் ஏனைய உபகரணங்கள் இருக்கும்... அவற்றிற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்!
அந்த ப்ளாட்டில், 9,600 சதுரடி மொட்டை மாடி தானே இருக்கும்; அந்த, 9,600 சதுரடி மொட்டை மாடியில், எத்தனை சதுரடி அளவில், சூரிய சக்தி மின் உற்பத்தி பேனல் அமைக்க முடியும்? அதிலிருந்து மொத்தமுள்ள, 80 ப்ளாட்களுக்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமா?ஒரு சிறிய குடும்பத்திற்குத் தேவையான நான்கு டியூப் லைட்கள், இரண்டு மின் விசிறிகள், ஒரு பிரிஜ், ஒரு வாஷிங் மிஷின், ஒரு, "டிவி' ஆகியவற்றை இயக்கத் தேவைப்படும் மின்சாரத்தைத் தயாரிக்க, உபகரணங்களைப் பொருத்த, குறைந்த பட்சம், 1 லட்சம் ரூபாய் தேவைப்படுமாம். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு என்பது, ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திற்கு, "சுமை'யான விஷயம் அல்லவா?
சூரிய சக்தி மின் உபகரணங்களை அமைக்க, அரசு ஊக்கத் தொகை வழங்க முன் வந்தாலும், அந்தத் தொகையை வாங்குவதற்குள் ஒரு சாமானியனுக்கு, "தாவு' தீர்ந்து விடும் என்பது ஒரு புறம். அரசு இனாமாக வழங்கும் தொகைக்கு, அரசு அலுவலர்களுக்கு ஒரு தொகையை, கப்பமாக அல்லது அன்பளிப்பாக (லஞ்சமாக அல்ல) கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மறுபுறம்.ஊக்கத் தொகை வழங்குவதாக, அரசு சொல்லிவிட்டதே தவிர, அந்தத் தொகையை வழங்குவதற்கான நிதி ஆதாரம் குறித்து, இதுவரை அரசு மூச்சு விடவில்லை.
மழைத் தண்ணீர் வீணாகி, விரயமாகி, மக்களையும் படுத்துவதைத் தவிர்க்க, "மழை நீர் சேகரிப்பு திட்டம்' என்றொரு புரட்சிகரமான திட்டத்தை, கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.அறிமுகப் படுத்தியதோடு விட்டு விடவில்லை. "மழை நீர் சேமிப்பு திட்டம்' என்ற, அத்திட்டத்தை கட்டாயமாக்கியதோடு, அரசு அலுவலகங்கள் உட்பட, அனைத்து வீடுகளும், கட்டடங்களும், அலுவலகங்களும், மருத்துவமனைகளும், ஓட்டல்களும், தொழிற்சாலைகளும், "இங்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது' என்று, எழுதியும் வைக்கச் செய்தார்.
அரசு அலுவலர்கள் களத்தில் இறங்கி, சோதனை செய்து, மழைநீர் சேகரிப்பு திட்டத்தைச் செயல்படுத்தாத வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு அபராதம் விதித்து, வசூலித்த காட்சிகளும் நன்றாகவே நடந்தேறின.மழைநீர் சேகரிப்பு திட்டம், நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. மக்கள் மழைநீர் சேகரிப்பு என்ற அத்திட்டத்தை முழு மனதோடு, நேர்மையாக, நாணயமாக, ஆர்வமாக செயல்படுத்தி இருந்தால், "சிரபுஞ்சி'யில் பெய்யும் அளவுக்கு மழை கொட்டினாலும் கூட, வீதிகளிலும், விளைநிலங்களிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது. அத்தனை நீரும் பூமியால் உறிஞ்சப்பட்டு, சேகரிக்கப்பட்டிருக்கும். நடந்ததா? அதே போன்றதொரு நிலைமை, இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்கு நேர்ந்து விடக் கூடாதே என்பது தான், நம் ஆதங்கம்.
எஸ்.ராமசுப்பிரமணியன்,எழுத்தா ளர்



0 comments:
Post a Comment