ரெனோ இந்தியா நிறுவனம்முதன் முறையாக 350 கார்கள் ஏற்றுமதி

சென்னை:ரெனோ இந்தியா நிறுவனம், முதன்முறையாக, 350 கார்களை, எண்ணூர் துறைமுகத்திலிருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்க் நாசிப் கூறியதாவது:
நிறுவனம், சென்னையை அடுத்த ஒரகடத்தில் தொழிற்சாலை அமைத்து, கடந்த, 2010ம் ஆண்டு முதல், வாகனங்களை தயாரித்து வருகிறது.வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், நிறுவனம், இதுவரையிலுமாக, ஐந்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திஉள்ளது.நடப்பாண்டு, ஜூலை மாதத்தில், டஸ்டர் வகை கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதுவரை, 19 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வகை கார்களுக்கு, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், அதிக வரவேற்பு காணப்படுகிறது.வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தேவையை ஈடு செய்யும் வகையில், ஒரகடம் தொழிற்சாலையில் தயாரான, 350 டஸ்டர் கார்கள், முதன் முதலாக, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இவை அனைத்தும், வலது பக்க ஓட்டுனர் இருக்கை அமைப்பு கொண்டவையாகும். இதன் மூலம், வலது பக்க ஓட்டுனர் இருக்கை அமைப்பு கொண்ட கார்களுக்கான சர்வதேச சந்தையில், நிறுவனம் முதன் முதலாக கால்பதித்துள்ளது. இவ்வாறு மார்க் நாசிப் கூறினார்.

0 comments: